நோய் தொற்று விகிதம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஒரே வழி கொரோனா பாதித்தவர்களை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான்


நோய் தொற்று விகிதம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஒரே வழி கொரோனா பாதித்தவர்களை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான்
x
தினத்தந்தி 24 April 2021 12:09 AM GMT (Updated: 24 April 2021 12:09 AM GMT)

நோய் தொற்று விகிதம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஒரே வழி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டு பிடித்து சிகிச்சை அளிப்பதுதான் என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பது எளிதில் கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல. வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் நிலைமை ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என்றாலும்கூட, நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் நாளில் 49,930 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 474 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது தொற்று விகிதம் 0.80 சதவீதம் மட்டுமே. ஆனால், நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 144 பேருக்கு பரிசோதிக்கப்பட்ட நிலையில், 12,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா சோதனை அதிகரிப்பு

இதன் மூலம் நோய்த்தொற்று விகிதம் 11.18 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று விகிதம் கடந்த 50 நாட்களில் 15 மடங்கு அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஒரே வழி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கண்டறிந்து, சிகிச்சையளிப்பது தான். அதற்கான முதல் நடவடிக்கையாக கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

புதிய உத்திகள்

அடுத்த 3 வாரங்களுக்குள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகி விடும். இதை உணர்ந்து கொரோனா சோதனைகளை அதிகரிப்பது, சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை அதிகரிப்பது, தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும், இவற்றைக் கடந்த புதிய உத்திகளையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

அதேபோல், பொதுமக்களும் தேவையில்லாமல் வீடுகளைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வேறு வழியின்றி, வீடுகளைவிட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயமாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்தல், ஏதேனும் பொருட்களைத் தொட்டால் கிருமிநாசினியை தொட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story