வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ண வாய்ப்புள்ளதா? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி


வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ண வாய்ப்புள்ளதா? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 24 April 2021 12:16 AM GMT (Updated: 24 April 2021 12:16 AM GMT)

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ணப்படுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் கூறியுள்ளார்.

சென்னை, 

தற்போதுள்ள சூழ்நிலைப்படி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பிற்காக என்னென்ன அறிவுரைகளை வழங்கலாம்? என்பது பற்றி நாங்களும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் அனைவருமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட அளவில் உத்தரவிடப்பட்டதாக கேட்டால், இதில் சுகாதாரத்துறை ஒட்டுமொத்த அளவில் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும். இதுபோன்ற விஷயத்தில் மாவட்ட கலெக்டர்களும் அங்குள்ள நிலமைக்கு ஏற்ப உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் உடையவர்கள்தான்.

அதோடு, இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, ஒட்டுமொத்த கருத்தைப் பெற்று அதுபற்றி எங்களிடம் தகவல் சொல்வார்கள். நாங்களும் மாநில அரசு மூலமாக சுற்றறிக்கை அனுப்புவோம்.

கொரோனா பரிசோதனை

தலைமைச் செயலாளருடன் இணைந்து 22-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் அனைவரும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று இதுவரை தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை தவிர வேறு சில நடவடிக்கைகளுக்காக அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14 மேஜைகள்

வாக்கு எண்ணிக்கையின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அந்த வளாகத்தில் பெரிய அளவில் கூடுதல் அறை கிடைத்தால் அதையும் பயன்படுத்திக் கொள்வோம்.

வாக்கு எண்ணிக்கையும் நடக்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. சிறிய அறைகளாக இருந்தால் 2 அறைகளில் மேஜைகளை போடுவோம். 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்குகளை ஒருங்கிணைத்து ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவோம்.

வாக்கு எண்ணும் நேரம்

வாக்கு எண்ணும் இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்ல முடியாது. அது வீணான சந்தேகங்களை எழுப்பிவிடும். எனவே பக்கத்தில் அறைகள் கிடைக்கிறதா? என்பதை அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது முழு ஊரடங்கின் நிலை பற்றி சுகாதாரத்துறை அறிவிக்கும். அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் தொடங்கும். பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்படும்.

தடுப்பூசி கட்டாயமா?

பின்னர் தபால் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெறும். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 8.30 மணி ஆகிவிடும்.

மேஜைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, சுற்றுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் மனு கொடுத்துள்ளனர். அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருக்கிறோம்.

தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கொரோனா பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டுமா? என்பதையெல்லாம் சுகாதாரத்துறைதான் கூற வேண்டும்.

1-ந்தேதி தபால் ஓட்டு எண்ணப்படுமா?

தபால் ஓட்டுகளை முந்தைய நாளில் எண்ணக் கூடாது என்று அ.தி.மு.க. கட்சி கோரியுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் என்ன செய்யப்பட வேண்டும்? வாக்கு எண்ணிக்கை அன்று என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்பதற்கான அறிவுரைகளை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்தளித்து வருகிறது. அதை மட்டுமே பின்பற்றுவோம்.

கொரோனா பரவலை காரணம்காட்டி வேட்பாளர்களின் முகவர்களின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டால், தற்போதய நிலவரப்படி அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதுபற்றி தேர்தல் ஆணையமும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதில் தமிழக சுகாதாரத் துறையின் அறிவுரையும் பின்பற்றப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் இருக்கும். வாக்கு எண்ணிக்கை முகவர் யாருக்கும் அன்று உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே மாற்று முகவர்களை வரவழைக்கலாம். எனவே 20 சதவீத முகவர்களை கூடுதலாக தங்கள் வசம் வேட்பாளர்கள் வைத்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story