சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2021 1:09 AM GMT (Updated: 25 April 2021 1:09 AM GMT)

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தேசிய அளவில் நேற்று (நேற்றுமுன்தினம்) 3.44 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை 13 ஆயிரத்து 766 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இது தேசிய அளவில் கணக்கிடும்போது 3.9 சதவீதம் ஆகும். அதேபோல் தமிழகத்தில் இறப்பு சதவீதம் 2.9 ஆக இருந்தது.

தமிழகத்தில் தற்போது 95 ஆயிரத்து 48 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 48 ஆயிரத்து 289 பேர் குறைவான அறிகுறியுடன் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல் 8 ஆயிரத்து 414 பேர் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளனர். 24 ஆயிரத்து 569 பேர் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

40 சதவீத படுக்கைகள் காலி

தற்போது 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த படுக்கைகள் ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆக்சிஜன் தேவை இல்லாத நோயாளிகள் வீட்டுக் கண்காணிப்பிலும், கொரோனா சிகிச்சை மையத்திலும் சிகிச்சை பெறலாம் என்பது மருத்துவ வல்லுனர்களின் கருத்து.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து வருவதற்காக சென்னையில் 96 டெம்போ வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அறிகுறி அதிகமாகவும், காத்திருக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும்போது 108 ஆம்புலன்சு சேவை தொடர்பு எண்ணையும், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் 104 அவசர உதவி எண்ணையும் நோயாளிகள் தொடர்புகொண்டால், ஆஸ்பத்திரிகளில் தேவையற்ற கூட்டம் சேராது.

தேவைக்கு ஏற்ப மருத்துகள் கையிருப்பில் உள்ளன. ஆனால் சிலர் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை தாமாக வாங்கி வீட்டிலேயே போட்டுக் கொள்கின்றனர். அதைத் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் 4 ஆயிரத்து 256 இடங்களில்தான் 3-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உள்ளது.

2,400 ஆக்சிஜன் படுக்கைகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 363 டாக்டர்களை கூடுதலாக நியமித்துள்ளோம். அதேபோல் மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த ஆயிரத்து 645 டாக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவசரமில்லாத அறுவை சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவை அடுத்த 10 நாட்களுக்கு ஒத்திவைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐ.ஓ.ஜி., ஆர்.எஸ்.எம். ஆஸ்பத்திரிகளில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ முறை

சென்னையில் மீண்டும் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறை விரைவில் தொடங்கப்படும். தமிழகத்துக்கு இதுவரை 55 லட்சம் ‘கோவிஷீல்டு’, 10.85 லட்சம் ‘கோவேக்சின்’ என மொத்தம் 65.85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. முழு ஊரடங்கின்போதும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story