கார் கவிழ்ந்து மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது சிவகங்கை கலெக்டர் உயிர் தப்பினார்


கார் கவிழ்ந்து மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது சிவகங்கை கலெக்டர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 25 April 2021 1:13 AM GMT (Updated: 25 April 2021 1:13 AM GMT)

காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிவகங்கை கலெக்டர் உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் படுகாயம் அடைந்தார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று காலையில் காரைக்குடி ஆஸ்பத்திரிக்கு ஆய்வுக்கு செல்வதற்காக புறப்பட்டார். சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் வழியாக காரைக்குடியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த காரை டிரைவர் செபஸ்தியான்(வயது 48) ஓட்டினார். காரின் முன்பகுதியில் கலெக்டரும், பின்இருக்கையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன்(38), தபேதார் ராஜசேகரன்(55), பாதுகாவலர் முகமது மீரா பாஜித்(38) இருந்தனர். அந்த கார் காளையார்கோவிலில் இருந்து கல்லல் செல்லும் வழியில் காளகண்மாய் என்ற இடம் அருகே சென்ற போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் செபஸ்தியான் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்து அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் பாதியாக முறிந்து காரின் மேல் பகுதியில் விழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

கலெக்டர் உயிர் தப்பினார்

இந்த விபத்தில் கார் சேதம் அடைந்தது. கலெக்டர் காருக்குள் சிக்கிக்கொண்டார். கலெக்டரின் பாதுகாவலர் முகமது மீரா பாஜித் கார் கதவை திறந்து வெளியே குதித்தார்.

பின்னர் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த கலெக்டரை பத்திரமாக வெளியே மீட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கலெக்டர், டிரைவர், தபேதார், பாதுகாவலர் ஆகிய 4 பேரும் லேசான காயத்துடன் தப்பினார்கள். கலெக்டருக்கு சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன் தோள்பட்டையில் படுகாயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

நேர்முக உதவியாளருக்கு சிகிச்சை

கலெக்டர் உள்பட மற்ற 4 பேரும் மற்றொரு காரில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வந்தனர். அங்கு அவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. பின்னர் 4 பேரும் வீடு திரும்பினார்கள். கலெக்டரின் உதவியாளர் மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story