'நீட்' தேர்வில் மதிப்பெண் குளறுபடி குறித்து போலீஸ் விசாரணை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு


நீட் தேர்வில் மதிப்பெண் குளறுபடி குறித்து போலீஸ் விசாரணை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு
x
தினத்தந்தி 25 April 2021 1:55 AM GMT (Updated: 25 April 2021 1:55 AM GMT)

நீட் தேர்வில் மதிப்பெண் குளறுபடி குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை, 

கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வை எழுதினார்.

இந்த தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி இணையதளத்தில் வெளியானபோது, மனோஜ் 700-க்கு 594 மதிப்பெண் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை அந்த மாணவர் செல்போனில் படம் எடுத்து வைத்திருந்தார். ஆனால், அவர் வெறும் 248 மதிப்பெண்களே எடுத்துள்ளதாக அக்டோபர் 17-ந் தேதி திருத்தப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

தேவையில்லை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மதிப்பெண் குளறுபடி குறித்து சைபர் கிரைம் வழக்குகளை விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை கொண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு செய்துள்ளது. ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசே விசாரித்துவரும் நிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை இல்லாதது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதன் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தள்ளிவைப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர், மேல்முறையீட்டு வழக்குக்கு மாணவர் மனோஜ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story