வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு


வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
x
தினத்தந்தி 25 April 2021 2:12 AM GMT (Updated: 25 April 2021 2:12 AM GMT)

வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த இளம்பெண்ணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகள் மாரியம்மாள் (வயது 19). இவர் தெருக்களில் கிடக்கும் பாட்டில், பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 21-ந் தேதி மாரியம்மாள் சேரன்மாதேவி மெயின் ரோட்டில் குப்பைகளை சேகரித்து கொண்டு இருந்தார். அப்போது, சாலையில் ஒரு மணிபர்ஸ் கிடந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது, ரூ.58 ஆயிரத்து 210 மற்றும் ஒரு செல்போன், 2 ஆதார் கார்டுகள் இருந்தன. உடனே மாரியம்மாள் அந்த மணிபர்சை முக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

உரியவரிடம் ஒப்படைப்பு

போலீசார் விசாரணையில், அந்த மணிபர்ஸ் சேரன்மாதேவி காயிதே மில்லத் தெருவை சேர்ந்த முகம்மது ஹனிபா மனைவி ஜாஸ்மின் நிஷாவுக்கு உரியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தனது கணவருடன் முக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு வந்து பணம், செல்போன், ஆதார் கார்டுகளுடன் மணிபர்சை பெற்றுக் கொண்டார். கீழே கிடந்த மணிபர்சை எடுத்து போலீசில் ஒப்படைத்த மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி அவருக்கு முக்கூடல் போலீசார் சார்பில் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

இந்த நிலையில் மாரியம்மாளின் இந்த நல்ல செயலை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாரியம்மாளை தனது அலுவலகத்துக்கு வரவழைத்தார். அவரது நேர்மை குணத்தை பாராட்டி பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், ‘‘வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாரியம்மாளின் நேர்மையை பாராட்டுகிறேன். அவருக்கு மாவட்ட போலீஸ் துறை சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

அப்போது மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளர் கங்கா தரானந்தா சுவாமி பொன்னாடை அணிவித்து ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கி, பாராட்டினார்.

மாரியம்மாள் 5-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். குடும்ப வறுமை காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story