திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மடிக்கணினியுடன் சுற்றித்திரிந்த 2 பேரால் பரபரப்பு தேர்தல் அதிகாரியிடம் கே.என்.நேரு புகார்


திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மடிக்கணினியுடன் சுற்றித்திரிந்த 2 பேரால் பரபரப்பு தேர்தல் அதிகாரியிடம் கே.என்.நேரு புகார்
x
தினத்தந்தி 25 April 2021 2:44 AM GMT (Updated: 25 April 2021 2:44 AM GMT)

திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மடிக்கணினியுடன் சுற்றித்திரிந்த 2 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களால் வாக்குகள் மாற்றம் செய்திருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை மேற்கு தொகுதி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மேல் அறையில் 2 பேர் மடிக்கணினியுடன் அனுமதியின்றி திரிந்துள்ளனர்.

அதனால், வாக்குகள் மாற்றம் செய்ய வந்தவர்களா? என்ற அச்சம் ஏற்பட்டு அத்தொகுதி தி.மு.க. வேட்பாளரும் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு நேற்று திருச்சி ஆர்.டி.ஓ.வும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான விசுவநாதனிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செல்போனுடன் போலீசார்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியின் வாக்குபெட்டிகள் உள்ள மேல் தளத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மேல் தளத்தில் பாதுகாப்பு போலீசார் தங்கி உள்ளனர்.

கடந்த 20-ந்தேதி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், பாதுகாப்பு போலீசார் மடிக்கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றுமாறு கூறினேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அங்கேயே தங்கி இருப்பதும் தொடர்ந்து மடிக்கணினி பயன்படுத்துவதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. ஆகவே தேர்தல் நடத்தும் அதிகாரி உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு அறைக்கு உண்டான தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாக்குகள் மாற்றம் என சந்தேகம்

அதன் தொடர்ச்சியாக நேற்று வாக்கு எண்ணும் மையத்திற்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்காக டெக்னீஷியன்கள் செல்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியின் பெயரில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு மடிக்கணினி வைத்து பாதுகாப்பு அறைக்கு மேல் தளத்தில் வைத்து பணி செய்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அங்கிருந்த காவலர்களிடம் தெரிவிக்கப்பட்டு சோதனை நடத்தினார்கள். சோதனையில் அவர்களுக்கு மடிக்கணினி எடுத்துச்செல்ல அனுமதி கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதி இல்லாமல் பணியில் இருந்த போலீசார் எவ்வாறு அந்த மடிக்கணினியை எடுத்துச்செல்ல அனுமதித்தார்கள்?. இதனால் வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகளை மாறுதல் செய்திருக்கலாமோ? என்ற ஐயப்பாடு எழுகிறது. அதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி தலையிட்டு சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story