வங்கி ஊழியர் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்


வங்கி ஊழியர் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 April 2021 2:55 AM GMT (Updated: 25 April 2021 2:55 AM GMT)

வங்கி ஊழியரை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது மனைவி மற்றும் அந்த பெண்ணி கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

தேனி, 

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் கம்பம் நகரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25) கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனிஷ்கா (7) என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று அதிகாலை அருண்குமார் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அருண்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்து கொலை

அருண்குமாரின் கழுத்துப்பகுதியில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து வைஷ்ணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, வைஷ்ணவிக்கும், அதே ஊரை சேர்ந்த பக்கத்து தெருவில் வசிக்கும் குபேந்திரன் மகன் ஜெயச்சந்திரன் (26) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இது அருண்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அவர் வைஷ்ணவியை கண்டித்தார். அப்போது அவருக்கும், வைஷ்ணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வைஷ்ணவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அருண்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வைஷ்ணவி, ஜெயச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு கூறினார். உடனே ஜெயச்சந்திரன் அங்கு வந்தார். அப்போது அவரிடம் அருண்குமார் தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட மோதலில் ஜெயச்சந்திரனும், வைஷ்ணவியும் சேர்ந்து அருண்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வைஷ்ணவியையும், ஜெயச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story