2 ஆயிரம் கிலோ பூக்களால் அலங்கரித்த மண்டபத்தில் விழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது


2 ஆயிரம் கிலோ பூக்களால் அலங்கரித்த மண்டபத்தில் விழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது
x
தினத்தந்தி 25 April 2021 5:26 AM GMT (Updated: 25 April 2021 5:26 AM GMT)

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. இதனால் கோவில் முன் பெண்கள் திரண்டு மங்கலநாண் மாற்றிக்கொண்டனர்.

மதுரை, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

எப்போதும் மீனாட்சி திருக்கல்யாணம் வடக்கு, மேல ஆடி வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறும். ஆனால் இந்தாண்டு கோவிலுக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இதையொட்டி அந்த மண்டபம் பல லட்ச ரூபாய் செலவில் சுமார் 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட பல வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மணக்கோலத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர்

திருக்கல்யாணத்தையொட்டி நேற்று அதிகாலை மீனாட்சி அம்மன், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்கக்கவசத்துடன், ரோஸ் நிற கேரா பட்டு சேலை உடுத்தி, முத்துக்கொண்டை போட்டும் வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்திருந்தார்.

சுந்தரேசப்பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை பச்சைப்பட்டும் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திருக்கல்யாண சம்பிரதாய பூஜைகளை தொடர்ந்து, வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தாலியை செந்தில் பட்டர், ஹலாஸ் பட்டர் ஆகியோர் சுந்தரேசுவரரின் பாதம், கரங்களில் வைத்து 3 முறை எடுத்துக்காட்டினார்கள். காலை 8.47 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதசுரம் ஒலிக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

பாரம்பரியத்துடன் நடந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை காணுவதற்கு பக்தா்கள் இந்தாண்டு அனுமதிக்கப்படவில்லை.

மங்கலநாண் அணிந்த பெண்கள்

இருந்தாலும் ஏராளமான பெண்கள் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி சிலை முன்பு கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்த நேரத்தில் புதிதாக மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தை மாற்றி அணிந்து கொண்டனர்.

இந்த திருக்கல்யாண நிகழ்வுகள் இணையதளம் மூலமும், தொலைக்காட்சிகள் மூலமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட போது, அதை டி.வி.யில் பார்த்து வீட்டில் இருந்தபடியே ஏராளமான பெண்கள் புதிய மங்கலநாண் அணிந்து கொண்டனர்.

கோவிலை நோக்கிபடையெடுத்த பக்தா்கள்

திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் எப்படியும் கோவிலுக்கு திரண்டு வருவார்கள் என்பதால், மீனாட்சி கோவிலுக்கு வெளியே சித்திரை வீதியில் இருந்து மாசி வீதி வரை போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா். அவா்கள் பக்தா்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியாதவாறு தடுப்பு அமைத்திருந்தனா். அதனையும் மீறி ஒரு சில பக்தா்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்காக கோவிலை நோக்கி வந்தனா். அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா். மணக்கோலத்தில் மீனாட்சியை காண முடியாத மனவேதனையில் பக்தா்கள் கோபுரத்தை தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் நிகழ்வு முடிந்த பிறகு 10 மணிக்கு மேல் பக்தர்கள் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வழியாக மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை காண அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மணக்கோலத்தில் வீற்றிருந்த உற்சவர் மீனாட்சி, சுந்தரேசுவரரை காண அனுமதிக்கப்படவில்லை. இது பக்தர்களை மிகவும் வேதனை அடையச்செய்தது.

Next Story