தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு


தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 4:22 PM GMT (Updated: 25 April 2021 4:22 PM GMT)

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அடுத்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதன் தொடர்ச்சியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-

''ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகப்படுத்துவது மக்கள் கூட்ட நெரிசலை முழுவதுமாக கட்டுப்படுத்துவது.

மக்கள் அதிகம் கூடும் விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், தேனீர் கடைகள் ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது. கடைகளில் பார்சல்களை மட்டுமே அனுமதிப்பது.

கோயில்களில் பொது வழிபாட்டுக்கு தடைவிதிப்பது, வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றுக்குத் தடை விதிப்பது. மளிகை காய்கறிக் கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல செயல்பட அனுமதிப்பது.

திருமண விழாக்களில் 50 நபர்கள் மற்றும் இறுதி சடங்குகளில் 25 பேர் மட்டுமே அனுமதி. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, கார் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிப்பது.

சிவப்பு கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு முகாம்கள் மூலமாக கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவது, கொரோனா பரிசோதனைகளை விரைவுபடுத்தி, அதன் மூலம் பரவலைக் உடனுக்குடன் கட்டுப்படுத்துவது. அதற்காக மருத்துவப் பணியாளர்களை அதிகம் ஈடுபடுத்துவது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் ஆஷா பணியாளர்கள் மூலமாக மருத்துவ மற்றும் இதர உதவிகள் செய்து தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. எதிர்வரும் சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் (பிராணவாயு) படுக்கைகளை மேலும் அதிகப்படுத்துவது.

மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கூடுதலாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பது. கரோனா இறப்புகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவது.

மருத்துவ கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவது மற்றும் அவர்கள் சுமையின்றி பணியாற்றுவதை உறுதி செய்வது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவுள்ளதால் அது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

Next Story