ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் கூறியது என்ன...?


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் கூறியது என்ன...?
x

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால், அவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரமமில்லாமல் சுவாசிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் செயற்கையாக அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் அடைக்கப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், எங்களுக்கு அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே  கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார். 

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலையை திறந்து அங்கு தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மதிமுக, விடுதல்கை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பில்லை.

கூட்டத்தில் கூட்டத்தில், திமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனம், 'ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதியுங்கள். அந்த ஆக்சிஜனை இலவசமாக வழங்குகிறோம்' என்று சுப்ரீம் கோர்ட்டில்  மனுத் தாக்கல் செய்து, அதில் தமிழக அரசும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

அந்த மனுவினை ஏற்றுக் கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட் , 'தமிழக அரசே அந்த ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை ஏன் எடுத்து நடத்திடக் கூடாது' என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

'மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட்ட் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.

அதே நேரத்தில், நாம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து, அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலைகுலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது.

சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.

அதேசமயம், தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.

நாடு முழுவதும், ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், 'ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆலையை' மட்டும் இயக்கி, மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல.

நாட்டு மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி ஆக்சிஜன் கோரிக்கையை வைக்கிறார்கள்.சுப்ரீம் கோர்ட்டே ஏன் மாநில அரசே அதை தயாரித்துக் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தைப் பார்த்துக் கேட்கிறது. இந்த நேரத்தில் ஒருமைப்பாட்டின் பக்கம், மனிதாபிமானத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழகம் ஆக்சிஜன் வழங்குவதிலும் முன்னணியில் நின்றது என்ற பெருமையும் நாம் பெறக் கூடியதுதான்.

ஆகவே, சுப்ரீஇம் கோர்ட்டில்  தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில்,

* இந்த அனுமதி தற்காலிகமானது.

* அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது.

* ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.

* அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும்.

* ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட காலவரம்புக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

* இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து - ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும்.

* ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.

* மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்.

நாங்கள் கூறிய இந்தக் கருத்துகளை, சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசின் சார்பில் அழுத்தமான கருத்துகளாக முன்வைக்க திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கனிமொழி பேசினார்.

Next Story