தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு


தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 April 2021 12:57 AM GMT (Updated: 27 April 2021 12:57 AM GMT)

தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு.

சென்னை, 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 2-ம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலை பயன்படுத்திக்கொண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதாக கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்த காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாக கூறுவது கேலிக்கூத்தானது.

கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனை கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதும், கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்துவதும் தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதாக உள்ளது.

ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவு என அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன்நகர்வுகளை, தமிழக அரசு முற்றிலுமாக தடுத்து நிறுத்தவேண்டும். இதற்கு மாறாக, தற்கால சூழலை காரணமாக காட்டி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும். தேவையற்றப் பதற்றமும், சட்டம்-ஒழுங்கு சிக்கலும் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story