ஆக்சிஜன் உற்பத்திக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் அனுமதி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் மறியல்


ஆக்சிஜன் உற்பத்திக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் அனுமதி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 27 April 2021 2:06 AM GMT (Updated: 27 April 2021 2:06 AM GMT)

ஆக்சிஜன் உற்பத்திக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ஆலை அருகே போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, தூத்துக்குடியில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய வசதி இருப்பதாகவும், அதில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருவதாகவும் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதே நேரத்தில் மாநில அரசின் கருத்தையும் உச்சநீதிமன்றம் கேட்டது. அப்போது, தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆலையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

பாதுகாப்பு

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்க பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை முன்பும் கலவர தடுப்பு வாகனம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் உரிய பாதுகாப்பு தளவாடங்களுடன் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு நிலவியது.

மறியல்-கைது

இதற்கிடையே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

அவர்கள், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கண்டித்தும், எந்த காரணத்துக்காகவும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கலைந்து செல்லாததால், மறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கலெக்டரிடம் மனு

முன்னதாக போராட்டக் காரர்கள், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது என்று கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு கொடுத்தனர். 

Next Story