தி.மு.க. சார்பில் வழங்கப்படுகிறது கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தி.மு.க. சார்பில் வழங்கப்படுகிறது கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 April 2021 3:21 AM GMT (Updated: 27 April 2021 3:21 AM GMT)

கனடா பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, 

அன்னைத் தமிழ்மொழிக்கு உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் “தமிழ் இருக்கை” அமைக்கப்பட்டு, ஆங்காங்கு வாழும் தமிழர்கள் மொழித் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சீரிய முயற்சிக்கு தி.மு.க. தொடர்ந்து நிதியுதவி அளித்து, தமிழ்மொழியின் புகழும், பெருமையும் உலகெங்கும் பரவிடத் தொய்வின்றி பணியாற்றி வருகிறது.

கனடா நாட்டில் உள்ள ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இருக்கை' உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தோடு கனடா வாழ் தமிழர்களும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு தி.மு.க.வின் சார்பில் நிதி உதவி தந்திடவேண்டும் என்றும் கனடியத் தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம்

அதன்படி, எத்திக்கிலும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் மொழிச் சிறப்பிற்கும் என்றென்றும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வின் சார்பில், கனடா ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை'க்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. செம்மொழி தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும். இளைஞர்களின் தாய்மொழித் தாகத்தைத் தீர்க்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story