‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் சோதனையான நிலையில் நாம் இருக்கிறோம்’’ அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் சோதனையான நிலையில் நாம் இருக்கிறோம்’’ அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 27 April 2021 4:03 AM GMT (Updated: 27 April 2021 4:03 AM GMT)

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சோதனையான நிலையில் நாம் இருக்கிறோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் கருத்துக்களை முன்வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு முன்னேற்பாடு

கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும் என முதன்முதலில் அறிவித்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போடுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, இதுவரை 52 லட்சத்து 61 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 1-ந்தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அறிவித்து, முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 450 என கண்டறியப்பட்ட தொற்று நோய், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து இன்றைய தினம் சுமார் 15 ஆயிரம் நபர்கள் அளவுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கின்றது.

கட்டுக்குள் உள்ளது

குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று கூடுதலாக உள்ளது. பெருகிவரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதாரம் அதிகளவில் பாதிக்காதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரிக்கவும், கொரோனா படுக்கைகள் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை பெருமளவில் அதிகரிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி

சில மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் இல்லையென்றாலும், இப்போது நாள்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம். இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நோய்த் தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மருத்துவ உட்கட்டமைப்புகளை, குறிப்பாக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, நேற்றையதினம், பிரதமருக்கு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனை தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கின்றேன். இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1997 முதல் 2018 வரை இயங்கி வந்த வேதாந்தா தாமிர உருக்காலை நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை ஐகோர்ட்டு அமர்வு உறுதி செய்தது.

மேல் முறையீடு

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்து, தற்போதுசுப்ரீம் கோர்ட்டில், அந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை வேண்டுகோளுடன் தாக்கல் செய்துள்ளது. அதாவது, ‘‘தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துக்களை பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும்; கொரோனா தாக்கத்தினால், தேவைப்படும் ஆக்சிஜனை தங்களது 2 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்திலிருந்து நாளொன்றுக்கு வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனை 1050 டன் உற்பத்தி செய்து அதனை அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வினியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என கேட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் தங்களது நிறுவனத்திலுள்ள 2 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்தில், உபகரணங்களின் நிலைமைக்கேற்ப 2 அல்லது 4 வாரங்களுக்குள்ளாகவே வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனை உற்பத்தி செய்து தர முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இன்று அல்லது நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கின்றது, தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம். மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை, அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story