கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணும் பணிக்கு தடை


கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணும் பணிக்கு தடை
x
தினத்தந்தி 27 April 2021 4:12 AM GMT (Updated: 27 April 2021 4:12 AM GMT)

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணும் பணிக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டேன். கடந்த 6-ந்தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து வருகிற மே 2-ந்தேதி எண்ணப்பட உள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இவர்களது சார்பில் அனைத்து முகவர்களை வாக்கு எண்ணும் இடத்தில் அனுமதித்தால், தனி மனித விலகல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற முடியாது. எனவே, கொரோனா பரவல் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற கோரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு கொடுத்தும் பதில் இல்லை’’ என்று கூறியிருந்தார்.

முகவர்கள்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘4 ஆயிரத்து 900 சதுர அடி மற்றும் 3 ஆயிரத்து 400 சதுர அடிகளில் 2 அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 2 சுயேச்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது முகவர்களை அனுப்பவில்லை என்று கூறிவிட்டனர். 9 அரசியல் கட்சிகளில், 7 அரசியல் கட்சிகள் மட்டும் முகவர்களை அனுப்பும். வாக்கு எண்ணிக்கைக்காக 6 கூடுதல் மேஜைகள் போடப்படும்’’ என்று கூறினார்.

தேர்தல் ஆணையமே காரணம்

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம். வாக்கு பதிவின்போது, கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்படுத்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்த வேண்டும்.

கலந்து ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல். தனி மனித இடைவெளியை பின்பற்றுதல். முக கவசம் அணிவதை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பொது சுகாதார இயக்குனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். வழக்கு விசாரணையை30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

தடை விதிக்க நேரிடும்

அன்றையதினம் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த தேர்தல் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை தேர்தல் ஆணையம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story