குலசேகரன்பட்டினம் அருகே பரபரப்பு: நிலக்கரி இறங்குதளம் பகுதியை படகில் சென்று மீனவர்கள் முற்றுகை; தூண்டில் பாலத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தல்


குலசேகரன்பட்டினம் அருகே பரபரப்பு: நிலக்கரி இறங்குதளம் பகுதியை படகில் சென்று மீனவர்கள் முற்றுகை; தூண்டில் பாலத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2021 10:56 PM GMT (Updated: 27 April 2021 10:56 PM GMT)

குலசேகரன்பட்டினம் அருகே தூண்டில் பாலம் அமைத்து தர வலியுறுத்தி, நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படும் பகுதியை படகில் சென்று மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கரி இறங்குதளம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் அனல் மின்நிலையம், நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. அனல் மின்நிலையம் அமைந்திருக்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பதாலும், கடல் மட்டத்தில் இருந்து உயரம் குறைவாக இருப்பதாலும் அதனை உயர்த்தும் பணியும் நடந்து வருகிறது.மேலும், அங்கு நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கரி கொண்டு வருவதற்காக கடற்கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்
இதற்கிடையே, கல்லாமொழி பகுதியில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் கல்லாமொழி, குலசேகரன்பட்டினம் பகுதிகளை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமலும், கடல் சார்ந்த தொழிலுக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், தூண்டில் பாலம் பணிகள் தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல படகை நீண்ட தூரம் இயக்கி செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் நேரம் ஆவதுடன் 
பணமும் வீணாக செலவாகி வருகிறது.

மீனவர்கள் முற்றுகை
இதனால் ஆவேசம் அடைந்த கல்லாமொழி, குலசேகரன்பட்டினம் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 35-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டு வரும் பகுதியை முற்றுகையிட்டனர். தூண்டில் பாலத்ைத விரைந்து அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் முருகேசன், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைதை நடத்தினர்.

பரபரப்பு
அப்போது அதிகாரிகள், மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவித்து அதை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதையடுத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். மீனவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story