18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 April 2021 12:12 PM GMT (Updated: 28 April 2021 12:12 PM GMT)

18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து செல்கிறது. உயிரிழப்புகள் 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர். இதனால் தடுப்பூசியின் தேவையை உணர்ந்து பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளன.

அதன்படி கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது. COWIN என்ற இணையதளம் மூலமாகவும், ஆரோக்ய சேது செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.




Next Story