தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 28 April 2021 11:25 PM GMT (Updated: 28 April 2021 11:25 PM GMT)

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் கர்நாடகாவில் இருந்து தென்கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 29-ந் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக உள்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story