கூவாகம் திருவிழா ரத்து: சென்னையில் கூத்தாண்டவருக்கு கும்மியடித்து திருநங்கைகள் வழிபாடு


கூவாகம் திருவிழா ரத்து: சென்னையில் கூத்தாண்டவருக்கு கும்மியடித்து திருநங்கைகள் வழிபாடு
x
தினத்தந்தி 29 April 2021 1:25 AM GMT (Updated: 29 April 2021 1:25 AM GMT)

கூவாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு கும்மியடித்து வழிபட்டனர். கொரோனாவை ஒழித்து மக்களை காக்கவேண்டும் என்றும் வேண்டினர்.

சென்னை, 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு அரவானை வணங்கி கோவில் பூசாரி மூலம் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். பின்னர் அதிகாலையில் தாலியை துறந்து விதவை கோலத்தில் திரும்பி செல்வார்கள்.

இந்தநிலையில் கொரோனா காரணமாக கூவாகம் திருவிழா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூத்தாண்டவருக்கு தாலி அறுக்கும் நாளான நேற்று, சென்னை சூளைமேட்டை சேர்ந்த திருநங்கைகள் மேற்கு நமச்சிவாயபுரம் பகுதியில் கூத்தாண்டவருக்கான சாங்கியங்களை செய்தனர்.

திருநங்கைகள் கும்மியடித்து வழிபாடு

முன்னதாக திருநங்கைகள் மணப்பெண் போல அலங்காரம் செய்து, கூத்தாண்டவருக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் 20 கிலோ கற்பூரம் ஏற்றி கும்மியடித்து கூத்தாண்டவரை வணங்கினர். அதனைத்தொடர்ந்து 101 தேங்காய்கள் உடைத்து வழிபட்டனர். திருநங்கை சோனியா ஏற்பாட்டில் நடந்த வழிபாட்டில் திருநங்கை நல வாரிய உறுப்பினர் சுதா, சாரதா, நூரி உள்பட திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர்.

திருநங்கைகள் கும்மியடிக்கும்போதே, ‘கூத்தாண்டவரே... கொரோனாவை ஒழித்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். கொரோனாவை ஒழித்து பழைய நிலைமைக்கு எங்களை கொண்டு வரவேண்டும்’, என்று ஆரவாரத்துடன் வேண்டினர். அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அனைவருக்கும் திருநங்கைகள் பிரசாதம் வழங்கினர்.

Next Story