தபால் ஓட்டுகளை எண்ணுவதில் ஒரே சீரான நடைமுறை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. கோரிக்கை


தபால் ஓட்டுகளை எண்ணுவதில் ஒரே சீரான நடைமுறை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 29 April 2021 3:17 AM GMT (Updated: 29 April 2021 3:17 AM GMT)

தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுகளை எண்ணுவதில் ஒரே சீரான நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முதலில் தபால் ஓட்டுகளை எண்ணி, அதற்கான முடிவுகளை அறிவித்த பின்னரே, வாக்கு பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தோம்.

அதாவது, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு அளித்துள்ள கையேட்டில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள நடைமுறைப்படி தபால் ஓட்டுகள் எண்ணப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.

தனி மேஜை

ஆனால் தற்போது அந்தக் கையேட்டில் உள்ள நடைமுறை உத்தரவுகளை திரும்பப் பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அறிகிறோம். மேலும், ஒவ்வொரு 500 தபால் ஓட்டுகளுக்கும் தனி மேஜையை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் எங்களின் சந்தேகம் தீர்க்கப்படுவதோடு, நேர்மையான சுதந்திரமான தேர்தல் நடக்க வழி வகுக்கப்படும். ஆனால் இதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதோடு அங்கிருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். எனவே நேரத்தை குறைப்பதற்காக அங்கு மேஜைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

சீராக ஆணையிடவில்லை

500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு மேஜை என்ற உத்தரவு, தமிழகத்தின் அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் ஒரே சீராக ஆணையிடப்படவில்லை. சென்னை மாவட்டத்திற்கான தேர்தல் நடத்தும் அதிகாரியைக் கேட்டபோது, தபால் ஓட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜையில் வைத்து எண்ண இருப்பதாகவும், இடையிடையே 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்தார். இது சரியானதாக அமையாது.

சென்னை மாவட்டத்தில் 2 தொகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இங்கு தபால் ஓட்டுகளை எண்ண கூடுதல் நேரம் ஆகும்.

குழப்பத்திற்கு வழிவகுக்கும்

விருதுநகர் மாவட்டத்தில், வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கும்போதுதான் தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளையும் அறிவிப்பதாக அங்குள்ள அதிகாரி கூறியிருக்கிறார். இது எங்களின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

தமிழகத்தில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு இந்த வகையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெவ்வேறு முறைகளை கடைபிடிக்க உள்ளனர். இது நேர்மையாக நடக்காமல் குழப்பத்தில் முடியும். மேலும் சட்ட விரோத காரியங்கள் நடக்கவும் வழிவகுக்கும்.

எனவே தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு ஒரே சீரான நடைமுறையை பின்பற்ற தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். 500 தபால் ஓட்டுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் அமைத்து, தபால் ஓட்டுகளை எண்ணி முடித்ததும் முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story