பொதுமக்கள் தேடி அலைய வேண்டாம்: ‘ரெம்டெசிவிர்’, உயிர்காக்கும் மருந்து இல்லை பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்


பொதுமக்கள் தேடி அலைய வேண்டாம்: ‘ரெம்டெசிவிர்’, உயிர்காக்கும் மருந்து இல்லை பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 29 April 2021 5:13 AM GMT (Updated: 29 April 2021 5:13 AM GMT)

‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை எனவும், அதனை பொதுமக்கள் வெளியே தேடி அலைய வேண்டாம் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரெம்டெசிவிர் மருந்து டாக்டர்களால் அதிகளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து வினியோகம் செய்கிறது.

தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு வினியோகம் செய்வதால், பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

உயிர்காக்கும் மருந்து இல்லை

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அனைவரும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக 2 கருத்தை தெரிவிக்கிறேன். ‘ரெம்டெசிவிர்’, உயிர்காக்கும் மருந்து இல்லை. உலக சுகாதார நிறுவனமும், தமிழக சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் இது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தேவையான அளவு உள்ளது

‘ரெம்டெசிவிர்’ மருந்து போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம். மற்றப்படி இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இது தேவைப்படலாம்.

ஆனால் அனைவருக்கும் ரெம்டெசிவிர் வேண்டும் என்ற தேவையற்ற மாயையில் இருக்கிறோம். இது அனைவருக்கும் தேவையான மருந்தும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் ரெம்டெசிவிர் மருந்தை தேடி அலைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை தேவையான அளவுக்கு ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளது. சுகாதாரத்துறை வழிமுறைகளின்படி யாருக்கு இந்த மருந்து தேவைப்படுகிறதோ அவர்களுக்கு டாக்டர்கள் வழங்குகின்றனர்.

தேவைப்படும் நபர்களுக்கு...

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து இருப்பதை தமிழக அரசு, உறுதி செய்வது மட்டுமல்லாமல், தேவைப்படும் நபர்களுக்கு, அதாவது அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாலும், அவர்களது மருத்துவ ஆவணங்கள், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு காண்பித்து தேவைக்கு ஏற்ப பெற்று கொள்ளும் வகையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் வழங்கி வருகிறோம்.

இப்போதைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு விட்டது. தேவைக்கு ஏற்ப இதனுடையை எண்ணிக்கைகள் கூடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story