ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 April 2021 5:17 AM GMT (Updated: 29 April 2021 5:17 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை, கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பண்டாரம்பட்டி, முத்தையாபுரம், காந்திநகர், பாரதிநகர், மீளவிட்டான், பனிமயநகர், வி.எம்.எஸ். நகர், குரும்பூர், ரகுமத்துல்லாபுரம், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்டை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இன்று கருப்பு தினம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரிராகவன் கூறும்போது, ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று (வியாழக்கிழமை) கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் வெள்ளை சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும். மாலை 3 மணியில் இருந்து துப்பாக்கி சூடு நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் புரபைலில் கருப்பு பட்டை அடையாளம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதற்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் பாத்திமா பாபு தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். மேலும் அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேர் மீது வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராமம் மற்றும் தூத்துக்குடி மட்டக்கடை புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சிலர் நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு விதிகளை மீறியும், தொற்று பரவும் வகையிலும், எந்தவித அனுமதியும் பெறாமல் நடந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் நடத்தியதாக வசந்தி, ஓட்டப்பிடாரம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணாதேவி, சந்தோஷ்ராஜ் உள்ளிட்ட 40 பேர் மீது சிப்காட் போலீஸ் நிலையத்திலும், புதுத்தெருவை சேர்ந்த மரிய ஹன்ஸ் (41) உள்ளிட்ட 21 பேர் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story