மே 1- சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்


மே 1- சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 29 April 2021 8:16 AM GMT (Updated: 29 April 2021 8:16 AM GMT)

மே 1-ஆம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் மே 1-ஆம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் ஐகோர்ட்டில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை ஐக்கொர்ட்  பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த விளக்கத்தை ஐக்கொர்ட்டில் அளித்துள்ளார்.

தொழிலாளர் தினத்துக்கு பொது விடுமுறை என்பதால், மே 1-ஆம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அன்றைய தினம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதால், முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதி முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை ஐகோர்ட் , தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.

Next Story