“சுகாதாரத்துறைக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்” - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை


“சுகாதாரத்துறைக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்” - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை
x
தினத்தந்தி 29 April 2021 9:16 AM GMT (Updated: 29 April 2021 9:16 AM GMT)

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை,

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நடிகர் விவேக் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதற்கு அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நடிகர் விவேக் உயிரிழந்தார்.

இதனையடுத்து நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மருத்துவர்கள் விளக்கமளித்த போதும், இது தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வந்தன. இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பும் விதமாக பல கேள்விகளை முன்வைத்தார். அவர் பேசிய காணொலி காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான், தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரியும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி வாங்க 2 லட்சம் ரூபாயை தமிழக சுகாதாரத்துறைக்கு மன்சூர் அலிகான் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என்றும் பதற்றத்தை உருவாக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

Next Story