கள்ளநோட்டு வழக்கு விவரங்களை தெரிவிக்க இன்ஸ்பெக்டர் மறுப்பு: போலீஸ் கமிஷனர் இன்று ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கள்ளநோட்டு வழக்கு விவரங்களை தெரிவிக்க இன்ஸ்பெக்டர் மறுப்பு: போலீஸ் கமிஷனர் இன்று ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2021 2:08 AM GMT (Updated: 30 April 2021 2:08 AM GMT)

கள்ளநோட்டு வழக்கு விவரங்களை இன்ஸ்பெக்டர் தெரிவிக்க மறுத்ததால், சென்னை போலீஸ் கமிஷனரை காணொலி காட்சி வாயிலாக இன்று ஆஜராக ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபனா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளநோட்டு கும்பல் ஒன்றை கைது செய்தார்.

இதில் கைதான செல்லிராம் குமாவர் என்பவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கில் செல்லிராம் குமாவரின் பங்கு என்ன? பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் நகல் எடுக்கப்பட்டதா? அல்லது அச்சிடப்பட்டதா? என்பது குறித்த விவரங்களை அரசு தரப்பு வக்கீலுக்கு இன்ஸ்பெக்டர் ஷோபனா தெரிவிக்கவில்லை.

உதவி கமிஷனர்

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்காதது, நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து உதவி கமிஷனரை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார்.

இவருக்கு பல முறை நீதிபதி வாய்ப்பு கொடுத்தும், அவராலும் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க முடியவில்லை. போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் பிரபாவதி, வழக்கு குறித்து தனக்கும் எந்த விவரமும் தெரியப்படுத்தவில்லை என்று கூறினார்.

கண்டனம்

போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து பிற்பகலில், அரசு தரப்பு வக்கீல் சண்முக ராஜேஷ்வரன் ஆஜராகி, “போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராவதற்கு பதில் பூக்கடை துணை கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும். காலையில் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி எம்.தண்டபாணி, “போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராவதற்கு பதில், காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Next Story