மாநில செய்திகள்

நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் திடீர் நில அதிர்வு பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்ததால் பரபரப்பு + "||" + A sudden earthquake in Nellai and Kanyakumari areas caused a stir as people rushed to the public road

நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் திடீர் நில அதிர்வு பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்ததால் பரபரப்பு

நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் திடீர் நில அதிர்வு பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்ததால் பரபரப்பு
நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நேற்று திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி, 

நெல்லை மாவட்டம் கூடங்குளம், பெருமணல், கூட்டப்புளி, செட்டிகுளம், இடிந்தகரை, கூத்தங்குழி, பரமேஸ்வரபுரம், பழவூர், காவல்கிணறு, தளவாய்புரம், பணகுடி, ராதாபுரம், சமத்துவபுரம் மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.40 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.

சுமார் 3 முதல் 5 வினாடிகள் இந்த லேசான நில அதிர்வு நீடித்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே வீதிக்கு ஓடி வந்தனர்.

கன்னியாகுமரியில்...

இதேபோல கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 3.45 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டின் சுவர்கள் அதிர்ந்தன. சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள் உருண்டு சரசரவென கீழே விழுந்தன. கட்டிலில் படுத்து இருந்தவர்கள், நாற்காலியில் அமந்திருந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், கடைகளில் வியாபாரம் கவனித்து கொண்டிருந்தவர்கள் என அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். அதிர்ச்சியில் உறைந்திருந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வு குறித்து பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் லேசான சத்தத்துடன் நிலஅதிர்வை உணர்ந்தோம். இதனால் அதிர்ச்சி அடைந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தோம். சில வினாடிகள் இந்த நிலஅதிர்வு நீடித்தது. அது ஓய்ந்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்’ என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் உள்ள ஒருசில கிராம மக்கள் நிலஅதிர்வை உணர்ந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆனால், நிலஅதிர்வை கண்காணிக்கும் கருவியில் இது பதிவானதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த அதிர்வுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். நெல்லை மாவட்டம் நிலஅதிர்வு, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்த பகுதி ஆகும். எனவே, அடுத்தகட்டமாக மக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படும் வகையில் நிலஅதிர்வு உருவாகுமா? என்பது குறித்து அதற்குரிய சென்னை தலைமை அலுவலகத்தில் கேட்டு உள்ளோம்’ என்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2-வது அணு உலைகளில் முழு உற்பத்தி திறனான தலா 1,000 மெகாவாட் என மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடந்து வருகிறது. நேற்று ஏற்பட்ட நிலஅதிர்வால் கூடங்குளம் அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் நில அதிர்வை கணக்கிடும் ரிக்டர் அளவுகோலில் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு 2.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு சம்பவத்தால் பொதுமக்கள் பீதியும், பதற்றமும் அடைந்தனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.