கொரோனா தொற்று இல்லை என்றாலும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பவருக்கு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை


கொரோனா தொற்று இல்லை என்றாலும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பவருக்கு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை
x
தினத்தந்தி 30 April 2021 4:44 AM GMT (Updated: 30 April 2021 4:44 AM GMT)

கொரோனா தொற்று இல்லை என்றாலும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

மே 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணப்படுவதால், அன்று முழு ஊரடங்கு இருந்தாலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்பது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும்.

தபால் ஓட்டு எண்ணிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சரிசமமான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தி.மு.க. புகார் கூறியிருக்கிறது. ஒரு மேஜையில் ஒரு நேரத்தில் 500 ஓட்டுகள் வரை எண்ணப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு சூழ்நிலைகள் நிலவுகின்றன.

எனவே அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் நடத்தும் அதிகாரி அதில் முடிவெடுக்கலாம். தேர்தல் கையேட்டிலும் அது அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் பக்கத்தில் அறை இருக்கும். சில இடங்களில் அறை இருக்காது. எனவே அந்தந்த இடங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தபால் ஓட்டுகளை எண்ணுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜையிலும் தபால் ஓட்டுகளை எண்ணலாம். தனி மேஜையிலும் எண்ண முடியும். தபால் ஓட்டுகாக அதிகபட்சம் 4 மேஜைகளை போடலாம். தபால் ஓட்டுகள் எத்தனை இருக்கும் என்பதை மதிப்பிட்டு அதற்கேற்ப முடிவுகளை எடுப்பார்கள்.

மேஜைகளின் எண்ணிக்கை

வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கையை பொறுத்த அளவில், அந்தந்த மையங்களில் உள்ள அறைகளின் தூரத்தை கணக்கிட வேண்டியதுள்ளது. வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் அறைகளுக்கு எடுத்துச்செல்லும்போது தூரமாக இருக்கும் அறைகளுக்கு கொண்டு செல்ல முடியாது. ஏனென்றால், அது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும். அரசியல் கட்சியினரே அதை எதிர்ப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை மையமாக உள்ள கல்லூரிகள் அனைத்தும் ஒரே வடிவில் கட்டப்பட்டு இருக்காது. எனவே அந்தந்த இடங்களுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இதுபற்றி வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கூடுதலாக இருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்றும் விதத்தில், கூடுதல் அறைகள் கிடைக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய கூறியிருந்தோம். ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வகையில்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜையில் எண்ணப்பட வேண்டிய தபால் ஓட்டுகள், வேறு தனி மேஜைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் எவ்வளவு மேஜை என்பது இன்னும் ஒரு சில இடங்களில் முடிவாகவில்லை. ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட ஒரு சில மையங்களில் இருந்து தரப்பட்ட இதுபற்றிய தகவல்கள் இன்னும் அங்கீகாரம் பெற்று வரவில்லை. கொரோனா பரவல் எதிரொலியாக அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது.

ஒரு மையத்தில் குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட வேண்டும் என்பதில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா? என்று கேட்டால், அதுபற்றி உறுதியாகக் கூற முடியாது. ஒரு மேஜைக்கு ஒரு தேர்தல் நுண் பார்வையாளர் (மத்திய அரசுப் பணியாளர்) இருப்பார்.

மாற்று அதிகாரிகள்

2016-ம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது 13 ஆயிரத்து 592 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். தற்போது 16 ஆயிரத்து 387 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கான மாற்று ஏற்பாட்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பி இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை நாளன்று யாருக்காவது தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு இந்த பட்டியலில் இருப்பவர்களை பயன்படுத்திக் கொள்வோம்.

கொரோனா தொற்று ஏற்பட்ட மற்ற பணியாளர்களை நாங்களே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகளை மாற்ற வேண்டுமானால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்ற பிறகே மாற்ற முடியும். எனவே இப்போதே அங்கீகாரம் வாங்கி வைத்துக்கொண்டால், வாக்கு எண்ணும் அன்று, ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

உடல் வெப்பம் அதிகமாக இருந்தால்...

வாக்கு எண்ணும் மையங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் இருப்பார்கள். அங்கு வருவோர் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். யாருக்காவது அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உடல் வெப்பம் காணப்பட்டால், அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றை அளித்திருந்தாலும், வாக்கு எண்ணிக்கை அன்று உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தடுப்பூசி போடும் பலருக்கும் காய்ச்சல் வருகிறது. உடல் வெப்பம் அதிகமாக இருப்பதும், ஒருவரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் வர தடை செய்வதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாதாரணமான உடல் வெப்பம் 98.6 டிகிரியாகும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோருக்கு எவ்வளவு அளவு உடல் வெப்பம் இருக்கலாம் என்பதை சுகாதாரத் துறை நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை விவரம்

வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்த அளவில், தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவே இறுதியானது. அவர்கள் தரும் தகவல்கள் தொகுக்கப்படும். பின்னர் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்படும். அதில் அனைத்து வாக்கு எண்ணிக்கை விவரங்களையும் பார்க்கலாம்.

2016-ம் ஆண்டு 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 6.28 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததால், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 66 ஆயிரத்து 7-ல் இருந்து (2016-ம் ஆண்டு), இந்த தேர்தலில் 88 ஆயிரத்து 937 ஆக உயர்த்தப்பட்டது. எனவே தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 251-ல் இருந்து (2016-ம் ஆண்டு) இந்த தேர்தலில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story