கொரோனா தடுப்பு பணி: டாக்டர்கள், நர்சுகளுக்கான நேர்காணல் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு


கொரோனா தடுப்பு பணி: டாக்டர்கள், நர்சுகளுக்கான நேர்காணல் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 April 2021 4:46 AM GMT (Updated: 30 April 2021 4:46 AM GMT)

சென்னையில், கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2-வது அலையின் தீவிரம் மிகுதியாகவே இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவின் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அந்த வகையில் கொரோனா களப்பணிகளில் மருத்துவ பணியாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள்(150 இடங்கள்), நர்சுகள்(150 இடங்கள்) தேர்வுசெய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான நேர்காணல் 29, 30-ந்தேதிகளில் நடைபெறுகிறது என்றும், விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒப்பந்த அடிப்படையில்...

அதன்படி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள பொதுசுகாதாரத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நேர்காணல் தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்போர் டாக்டர் பணியிடங்களான நேர்காணலிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் படித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்போர், நர்சு பணியிடங்களான நேர்காணலிலும் பங்கேற்றனர்.

நேர்காணலின்போது, டோக்கன் வினியோகிக்கப்பட்டு 3 பேர் வீதம் அழைக்கப்பட்டு சான்றிதழ்களின் நகல் பெறப்பட்டதுடன், பணி குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது. நேர்காணல் இன்றும் நடைபெறுகிறது.

தற்காலிக பணி

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நாளான நேற்று 400-க்கும் மேற்பட்டவர்கள் நேர்காணலுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story