கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? 6 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை


கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? 6 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 30 April 2021 4:54 AM GMT (Updated: 30 April 2021 4:54 AM GMT)

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர நடவடிக்கை மேற்கொள்வது பற்றி 6 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கொரோனா பரவலின் 2-வது அலை கடுமையாக வீசுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், தேனி, ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

எனவே இந்த மாவட்டங்களில் நிலவும் தொற்றின் நிலை, மேலும் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவை தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

பங்கேற்ற அதிகாரிகள்

தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த இந்த கலந்தாய்வு கூட்டத்தில், காணொலிக்காட்சி மூலம் அந்த 6 மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,

பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூடுதல் கட்டுப்பாடு வருமா?

ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா? என்பது பற்றி இந்தக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களைப்போல கொரோனா தொற்று எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் மேலாக தொற்று ஏற்படக்கூடிய மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அந்த மாவட்டங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story