விடுமுறை நாள் என்பதால் மே 1-ந்தேதி முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்


விடுமுறை நாள் என்பதால் மே 1-ந்தேதி முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்
x

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1-ந்தேதி அரசு விடுமுறை நாள் என்பதால்அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை,

கொரோனா 2-வது பரவல் தீவிரமாகி வருவதை அடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவர், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை எடுத்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என்று கருத்து தெரிவித்த ஐகோர்ட்டு, சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ந்தேதி எண்ணப்படுவதால், மே 1 மற்றும் 2-ந்தேதிகளில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

கொண்டாட்டம் கூடாது

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையமும், அரசும் ஆலோசித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பது குறித்து பத்திரிகைகளில் விரிவான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

வாக்கு எண்ணிக்கைக்கு பின் அரசியல் கட்சியினர் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க, 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது இரு தவணை தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில், கிருமி நாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அவசியமில்லை

வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதற்கு முந்தைய நாளான மே 1-ந்தேதியைப் பொறுத்தவரை, அன்றைய தினம் அரசு பொது விடுமுறை ஆகும். அதனால், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படாது. அதிகளவில் மக்கள் நடமாட்டமும் அன்று இருக்காது என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை. அதுமட்டுமல்ல மே 1-ந்தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதால், அதை தடுக்கும் விதமாக ஊரடங்கை அறிவிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு

இதையடுத்து நீதிபதிகள், “கொரோனா தொற்றில் இருந்து பத்திரிகையாளர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரல், “கொரோனா பரிசோதனை செய்த அல்லது தடுப்பூசி போட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்குள் அனுமதி வழங்கப்படும்.

இதுகுறித்து முழு விவரங்களை இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிப்பதாக கூறினார்.

இதை ஏற்று வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

கூட வேண்டாம்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சியினர் அதிக அளவில் கூடவேண்டாம். தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல, மே 1-ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து அரசுக்கு நாங்கள் யோசனை மட்டுமே முன்பு தெரிவித்தோம். அரசு தான் தகுந்த முடிவு எடுக்கவேண்டும். ரெம்டெசிவிர், படுக்கை, வென்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு குறித்தும், மாநில எல்லையில் தடுப்புகள் அமைப்பது குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மையம் திறப்பு

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “தடுப்பூசி தயாரிப்பின் அளவை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மூடப்பட்டு கிடக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மீண்டும் திறந்து உற்பத்தியை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று கூறினார்.

கள்ளச்சந்தையில் விற்பனை

தி.மு.க., எம்.பி.யும், மூத்த வக்கீலுமான பி.வில்சன், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் வாங்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நிற்கின்றனர். கூட்டம் அதிகம் இருப்பதால், இங்கு கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மருந்து கள்ளச்சந்தையிலும் விற்கப்படுவதாக தகவல் வருகிறது. எனவே, ரெம்டெசிவிர் விநியோகம் எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசின் கருத்து கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story