2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு


2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு
x
தினத்தந்தி 30 April 2021 5:32 AM GMT (Updated: 30 April 2021 5:32 AM GMT)

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைெபறும் 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

நாடுமுழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் வாக்குஎண்ணிக்கையின் போது சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் மே 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணியில் ஈடுபடுவோருக்கு விலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தலைமைச் செயலாளர்

இதுகுறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ நிபுணர்கள் குழு, மத்திய அரசின் உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 30-ந் தேதிவரை (இன்று) பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பரவல் வேகத்தின் அடிப்படையில் பல கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இந்தநிலையில் 2 வழக்குகள் விசாரணையின்போது 26-ந் தேதியன்று சென்னை ஐகோர்ட்டு சில கருத்துகளை தெரிவித்தது.

இந்தநிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு ஆகிய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நாள்

ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் மே 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அன்று தேர்தல் தொடர்பான அலுவலர்கள், உணவு வினியோகம் செய்வோர் மற்றும் அரசியல் கட்சியினரின், அதாவது வேட்பாளர்கள், தலைமை முகவர், வாக்கு எண்ணிக்கை முகவர் ஆகியோரின் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்காது.

கறிக்கடைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். சனிக்கிழமைகளில் மீன் சந்தை, மீன் கடைகள், கோழிக்கறி கடைகள் மற்றும் பல்வேறு இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

இவை உள்பட ஏராளமான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்து உத்தரவுகளை தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடரும் ஊரடங்கு

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ள மற்றொரு அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தில் கொரோனா பரவல் வேகத்தின் அடிப்படையில் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு ஆகிய கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை அந்த கட்டுப்பாடுகள் தொடரும்.

அதன்படி, இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு இருக்கும்போது, மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை.

பத்திரிகைகள் வினியோகம்

மருத்துவ அவசரத்திற்காகவும், விமான நிலையம், ரெயில்வே நிலையங்களில் பயணிகள் வசதிக்காகவும் ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும்.

மருந்துவமனைகள், மருந்துக் கடைகள், பால், பத்திரிகைகள் வினியோகம் மற்றும் சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ், பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகிய அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் இயங்கலாம்.

அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் இரவு ஊரடங்கில் பணியாற்றலாம்.

பார்சல் உணவு வினியோகம்

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும். அதில் தளர்வுகள் கிடையாது. காலை 6 மணி முதல் 10 மணிவரை, பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை உணவு விடுதிகளில் பார்சல் உணவு பெற அனுமதி உண்டு. ஸ்விகி, சொமட்டோ போன்ற பார்சல் உணவு வினியோகம் இந்த நேரத்தில் அனுமதிக்கப்படும்.

சனிக்கிழமைகளிலும் மீன் சந்தை, மீன் கடைகள், கோழி மற்றும் பிற இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும். அனைத்து நாட்களிலும் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் வரக்கூடாது. பூங்காக்கள், மிருககாட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொழுதுபோக்கு பூங்காக்கள் 50 சதவீத அளவில் இயக்கப்படலாம். திருமணங்களில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். சினிமா, டி.வி. நாடகங்களுக்கான படப்பிடிப்புகளை நடத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story