வரலாறு வியக்கும் வகையில் இந்த தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை


வரலாறு வியக்கும் வகையில் இந்த தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 11:46 PM GMT (Updated: 30 April 2021 11:46 PM GMT)

வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர் வெற்றி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், ‘‘வாக்குக் கணிப்பு’’, ‘‘எக்சிட் போல்’’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் செய்தித் தொகுப்புகள், அ.தி.மு.க. தொண்டர்கள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.

அ.தி.மு.க. என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கும் அசைந்துவிடாமல், அண்டிவந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அ.தி.மு.க. வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே உறுதிபடத் தெரிவிக்கின்றன.

2016-ம் ஆண்டு தேர்தல் முடிவு

கடந்த 2016 சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும், வாக்கு கணிப்புகளும் அ.தி.மு.க.வின் வெற்றியை குறிப்பிடவே இல்லை; மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக் கொண்டிருந்தன.

ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2016-ல் அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்ததையும், பிறகு அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்ததையும் நாம் பார்த்தோம்.

சோர்வடைய செய்ய முயற்சி

இப்போது வெளியிடப்பட்டு வரும் கணிப்பு முடிவுகள் அ.தி.மு.க. தொண்டர்களை சோர்வடையச் செய்து, வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி, நம்மை ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே தவிர வேறல்ல.

நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்றுங்கள். ஒரு வாக்கு கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வண்ணம் சுற்றிச், சுழன்று கடமையாற்றுங்கள்.

விழிப்போடு கண்காணிக்க வேண்டும்

தி.மு.க.வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா? என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.

அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியேவர வேண்டும்.

அ.தி.மு.க. வெல்லும்

எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க முடியாது என்றும், ஜெயலலிதாவின் தோல்வி உறுதி என்றும் பகிரங்கமாக சத்தியம் செய்தவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில், மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது.

களங்கள் அனைத்திலும் அ.தி.மு.க. வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே, வெற்றிமாலை சூட தயாராகுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை பட்டினபாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகளாக உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் தவறான முடிவை தந்துள்ளது. 2016 தேர்தலில், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

இதுபோன்ற கருத்து கணிப்புகள் சரியாக அமைவதில்லை. எனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story