மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து


மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து
x
தினத்தந்தி 1 May 2021 12:12 AM GMT (Updated: 1 May 2021 12:12 AM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், ‘‘தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொய்வின்றி நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

மே தின வாழ்த்து

வரலாற்று புகழ் பெற்ற சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பிரமாண்டமான பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவு கூறும் மே 1-ந்தேதியன்று தி.மு.க. சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. என்றைக்கும் தொழிலாளர்களின் உற்ற தோழனாக, அவர்களின் உரிமைக்குரலை எழுப்பும் உயிர்மிகு நண்பனாகத் தொய்வின்றி பாடுபட்டு வந்திருக்கிறது. தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் இனிமையாக்கிட, அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி.

அசைக்க முடியாத நம்பிக்கை

தி.மு.க. ஆட்சி என்றைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி. ஆளுங்கட்சியாக இருக்கும் போது நலத்திட்டங்கள், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களோடு இணைந்து நின்று போராடி, அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கும் ஒரே மாபெரும் இயக்கம் தி.மு.க.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் முன்பே நிறைவேற்றிக்கொடுத்து மகிழ்ந்தவர் கருணாநிதி. “தொழில் அமைதி” மட்டுமே தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம் தி.மு.க. என்பதால், தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதி பாடுபட்டிருக்கிறது.

மருத்துவ காப்பீடு திட்டம்

தி.மு.க. ஆட்சியில்தான் மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது. கருணாநிதி முதன் முதலில் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் பஸ்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் நலனுக்காகத் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. “நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டி தொழிலாளர்களின் உரிமைப் போர் நினைவூட்டி, போற்றப்பட்டது.

அல்லும், பகலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்; ஊக்கத் தொகை அளித்தது; விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்களை ஏற்படுத்தி, தொழிலாளர்களுக்கு பல்வேறு முத்தான நலத்திட்டங்களையும், தொழிலாளர்களின் உயிர் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும் வழங்கியது தி.மு.க. அரசுதான்.

அனைத்து நடவடிக்கை

தொழிலாளர்கள் தமிழகத்தின் இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களின் நலன் காக்கும் அரசுதான் இந்த மாநிலத்தின் நலன் காக்கும், நாட்டிற்கும் வளம் சேர்க்கும். எனவே, தொழிலாளர்கள் நலனுக்கு விரோதமான சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் தி.மு.க., தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” தி.மு.க. எப்போதும் திகழும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிதாக அமையப்போகும் தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களைத் தொய்வின்றி நிறைவேற்றவும், ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எடுத்துள்ள தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் உறுதியளித்து, தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் தி.மு.க.வின் சார்பில் மீண்டும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story