மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் எகிறும் பரவல் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி - 19,588 பேருக்கு புதிதாக தொற்று உறுதி + "||" + Lightning surge in Tamil Nadu kills 147 corona in one day - 19,588 new infections confirmed

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் எகிறும் பரவல் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி - 19,588 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் எகிறும் பரவல் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி - 19,588 பேருக்கு புதிதாக தொற்று உறுதி
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவல் எகிறுகிறது. நேற்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 147 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 731 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 11,951 ஆண்கள், 7,637 பெண்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 625 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,796 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 5,829 பேரும், செங்கல்பட்டில் 1,445 பேரும், கோவையில் 1,257 பேரும், நெல்லையில் 812 பேரும், திருவள்ளூரில் 779 பேரும், மதுரையில் 711 பேரும், தூத்துக்குடியில் 638 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 63 பேரும், பெரம்பலூரில் 43 பேரும், அரியலூரில் 38 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 86 ஆயிரத்து 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 42 ஆயிரத்து 656 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரத்து 246 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 92 பேரும், தனியார் மருத்துவமனையில் 55 பேரும் என தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 147 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே முதல் கொரோனா அலையின் போது, கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி 127 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிரிழப்பாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவு 147 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் நேற்று சென்னையில் 47 பேரும், திருவள்ளூர், சேலத்தில் தலா 14 பேரும், செங்கல்பட்டில் 11 பேரும், திருப்பத்தூரில் 7 பேரும், காஞ்சீபுரம், நெல்லையில் தலா 6 பேரும், ஈரோடு, திருச்சியில் தலா 5 பேரும், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூரில் தலா 4 பேரும், தென்காசியில் 3 பேரும், கடலூர், ராணிப்பேட்டை, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா 2 பேரும், கோவை, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூரில் தலா ஒருவரும் என 25 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரத்து 193 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 17,164 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,693 பேரும், செங்கல்பட்டில் 1,345 பேரும், கோவையில் 913 பேரும், திருவள்ளூரில் 834 பேரும் அடங்குவர். இதுவரையில் 10 லட்சத்து 54 ஆயிரத்து 746 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 405 பேர் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.