மீன்பிடி திருவிழாவில் கொரோனாவை மறந்து குவிந்த மக்கள் - 500 பேர் மீது வழக்குப்பதிவு


மீன்பிடி திருவிழாவில் கொரோனாவை மறந்து குவிந்த மக்கள் - 500 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 May 2021 8:15 PM GMT (Updated: 1 May 2021 8:15 PM GMT)

மதுரை அருகே தடையை மீறி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கொரோனாவை மறந்து மக்கள் குவிந்தனர். இதுதொடர்பாக 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சித்திரை மாதத்தில் கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி இந்த விழாக்கள் ஆங்காங்கே நடத்தப்படுவதுடன், மக்களும் அதில் பங்கேற்று மீன்களை பிடித்து வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

மதுரை மேலூர் அருகே திருவாதவூரில் பெரிய கண்மாய் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கண்மாயில் தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் மீன்பிடி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இருப்பினும் இந்த கண்மாயில் மே 1-ந் தேதியன்று மீன்பிடி திருவிழா நடக்க இருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அக்கம்பக்கத்து பகுதிகளிலும் இருந்தும் ஏராளமானோர் திருவாதவூர் பெரியகண்மாயில் நேற்று குவிந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாதவூர் மக்கள், கண்மாயில் யாரும் மீன்களை பிடிக்கக்கூடாது என கூட்டத்தினரை தடுத்தனர். அதனையும் மீறி வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் கண்மாய் தண்ணீரில் இறங்கி மீன்களை பிடித்துச் சென்றனர். இதில் நாட்டு கை மீன்களான கட்லா, வட்டச்சுழி கெண்டை, உளுவை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனர். வலைகளை பயன்படுத்தி பிடித்தவர்களுக்கு, 3 கிலோ எடையுள்ள கட்லா போன்ற மீன்கள் கிடைத்தன.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடை அமலில் உள்ள நிலையில், நோய் தொற்று ஏற்படும் வகையில் திருவாதவூர் பெரியகண்மாயில் மீன் பிடித்ததாக திருவாதவூர் கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன், மேலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி திருவாதவூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த சுமார் 500 பேர் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story