கொரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி: மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர் - ப.சிதம்பரம் பேட்டி


கொரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி: மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர் - ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 1 May 2021 8:23 PM GMT (Updated: 1 May 2021 8:23 PM GMT)

கொரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளதால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டதாக ப.சிதம்பரம் கூறினார்.

காரைக்குடி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் பெரும் தோல்வியை சந்தித்துவிட்டன. மத்திய அரசு மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டோம்.

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை குறித்து சுகாதாரத்துறை வல்லுனர்கள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் அப்போது கூடிய பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் கொரோனாவை தோற்கடித்ததாக பிரதமருக்கு நன்றி தெரிவித்தும், பட்டங்கள் வழங்கியும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

பா.ஜ.க. அரசின் அகந்தை இந்திய மக்களுக்கு பேரழிவை விளைவித்துள்ளது. உலகிலேயே கொரோனா தொற்றை இவ்வளவு மோசமாக கையாண்ட அரசு வேறு எங்கும் இருக்க முடியாது.

மாநில அரசு, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தட்டிக் கேட்க முடியவில்லை. கொரோனா தோற்றால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து சுகாதாரத்துறை ஒரு கணக்கு சொல்கிறது. மயானங்களில் எரியூட்டப்படும் சடலங்களின் எண்ணிக்கை வேறு ஒரு கணக்கினை சொல்கிறது. இரண்டிற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

கொரோனா ஒழிப்பு மீதான நடவடிக்கையை தடுப்பூசி திருவிழா என்கின்றனர். துக்கத்தை திருவிழா என்று சொல்வது மிகப்பெரிய அபத்தம். மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். மாற்றம் ஏற்படாவிட்டால் நாடு அதல பாதாளத்தில் சென்றுவிடும். இப்போது நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இனி சமூக அமைப்பும் அதல பாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். இதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story