கொரோனா உயிரை பறித்தது: ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மரணம்


கொரோனா உயிரை பறித்தது: ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மரணம்
x
தினத்தந்தி 1 May 2021 9:33 PM GMT (Updated: 1 May 2021 9:33 PM GMT)

கொரோனாவால் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் நேற்று உயிரிழந்தார். அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

சென்னை,

தமிழக போலீஸ்துறையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ஜான் நிக்கல்சன் (வயது 65). சென்னை கொளத்தூரில் வசித்து வந்த இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் கடந்த 26-ந்தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

ஜான் நிக்கல்சன், தமிழக போலீஸ்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் குரூப்-1 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி. ஆனார். அதன்பின்னர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். சி.பி.சி.ஐ.டி. திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதைத்தொடர்ந்து அவர், தி.மு.க.வில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார்.

தமிழ்நாடு வாள் சண்டை சங்கத்தின் தலைவராகவும் ஜான் நிக்கல்சன் இருந்து வந்தார். ஜான் நிக்கல்சனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரை அடுத்த ஆலங்கோடு ஆகும். இவரது மனைவி கிரேஸ் என்ற ஹெலினா, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஆவார். இவருக்கு எபன் நெக்சியா என்ற மகள் உள்ளார்.

சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி ஜான் நிக்கல்சனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ஆலங்கோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Next Story