மாநில செய்திகள்

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 6 நாட்களில் 15 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் வினியோகம் - ரூ.2 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை + "||" + Distribution of 15 thousand 'Remdecivir' drugs in 6 days at the Government Hospital, Kilpauk - Sales for Rs 2 crore 35 lakhs

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 6 நாட்களில் 15 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் வினியோகம் - ரூ.2 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 6 நாட்களில் 15 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் வினியோகம் - ரூ.2 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 6 நாட்களில் 15 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் ரூ.2 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு ‘ரெம்டெசிவிர், டோசிலிசுமாப், எனாக்சிபிரின்’ போன்ற ஊசி மருந்து, மாத்திரைகள் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டன. 2-வது அலை தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்தநிலையில் மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளான கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர்’ மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு மட்டுமே வழங்கி வெளி மருந்தகங்களில் வாங்கி வரும்படி உறவினர்களிடம் வலியுறுத்துகின்றனர்.

இதனால் பலர் தெருத்தெருவாக ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்க அலைந்தனர். மேலும் கள்ளச்சந்தையில் பல ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ‘ரெம்டெசிவிர்’ வயல் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 26-ந்தேதி முதல் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

இங்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் 2 இடங்களில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்தில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தினமும் இதனை நீண்ட வரிசையில் காத்திருந்து, நோயாளிகளின் உறவினர்கள் வாங்கி செல்கின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:-

உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு ஒரு வயல் ரூ.1,568 என 6 வயல்கள் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 6 நாட்களில் 15 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ வயல்கள், ரூ.2 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனையை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் ‘ரெம்டெசிவிர்’ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

6-வது நாளான நேற்றும் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கூட்டம் குவிந்தது. மேலும், மருந்து விற்பனை செய்யும் இடத்தில் பல குளறுபடிகள் நடக்கிறது எனவும், அதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.