காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி


காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி
x

காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். அவர், கடைசி சுற்றுவரை போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

காட்பாடி, 

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனும், அ.தி.மு.க சார்பில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் வி.ராமு உள்பட 15 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று வேலூர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து அ.தி.மு.க வேட்பாளர் வி.ராமு முன்னிலை வகித்தார். தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்தார்.

9-வது சுற்றில் துரைமுருகன், அ.தி.மு.க வேட்பாளர் ராமுவை விட 57 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். இதனால் வாக்கு எண்ணிக்கையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

18-வது சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பின்னர் மாறி மாறி இருவரும் முன்னிலை வகித்தனர். 25 சுற்றுகளின் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராமு தி.மு.க. வேட்பாளர் துரைமுருகனை விட 346 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இரவில் தபால் ஓட்டு முடிவு

இந்த நிலையில் இரவு தபால் ஓட்டு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 1,778 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க வேட்பாளர் ராமு 608 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னிலையில் இருந்த ராமு பின்னுக்கு தள்ளப்பட்டார். இதில் 824 வாக்குகள் பெற்று துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதற்கிடையே பழுதான 5 எந்திரங்களில் 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. அதில் துரைமுருகனுக்கு ஏற்றங்கள், இறக்கங்கள் இருந்தாலும் கடைசியாக 746 வாக்குகள் பெற்று துரைமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி அறிவித்தார்.

தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 85 ஆயிரத்து 140 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமு 84,394 வாக்குகளும் பெற்றனர். அப்போது தி.மு.க தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் துரைமுருகனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி வெற்றி பெற்றதற் கான சான்றிதழ் வழங்கினார்.

போராட்ட வெற்றி

அ.தி.மு.க. வேட்பாளர் ராமு முதலில் முன்னணியில் சென்றதால் தி.மு.க.வினரிடம் திக்...திக்...மன நிலையே காணப்பட்டது. கடைசியில் துரைமுருகன் நீண்ட போராட்டத்துக்கு பின் வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story