சட்டமன்ற தேர்தல்: அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி படுதோல்வி ஒரு இடம்கூட கிடைக்காமல் ஏமாற்றம்


சட்டமன்ற தேர்தல்: அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி படுதோல்வி ஒரு இடம்கூட கிடைக்காமல் ஏமாற்றம்
x
தினத்தந்தி 2 May 2021 11:11 PM GMT (Updated: 2 May 2021 11:11 PM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில்கூட வெற்றி கிடைக்காததால் இக்கூட்டணியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.) தலைமையில் புதிய கூட்டணி உருவானது. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க. 60 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. 6 இடங்களிலும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டன.

அ.ம.மு.க. மட்டும் 165 இடங்களில் போட்டியிட்டது. இதில் கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதும் அடங்கும்.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.

டி.டி.வி.தினகரன், பிரேமலதா

234 தொகுதிகளில் ஒரு இடத்தைக்கூட அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பெறமுடியவில்லை. கோவில்பட்டியில் போட்டியிட்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தோல்வி அடைந்தார். அவர் 56 ஆயிரத்து 153 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் 12 ஆயிரத்து 403 வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். இந்தக் கூட்டணியில் ஏராளமானோர் ‘டெபாசிட்’ இழந்தனர்.

ஒரு இடம்கூட கிடைக்கவில்லை

இந்த தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் அரசியல் விலகல், டி.டி.வி.தினகரனின் அதிரடிப் பேட்டிகள், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க. இணைந்தது, அ.தி.மு.க. குறித்த பிரேமலதாவின் விமர்சனங்கள் என தேர்தல் களத்தில் அ.ம.மு.க. கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அ.ம.மு.க. ஏற்படுத்தும் என டி.டி.வி. தினகரன், பிரேமலதா ஆகியோர் உறுதிபட கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தேர்தல் முடிவு அ.ம.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 234-ல் ஒரு தொகுதிகூட கிடைக்காததால் அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறது.

Related Tags :
Next Story