கடும் போட்டிக்கு இடையே கமல்ஹாசன் தோல்வி மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை


கடும் போட்டிக்கு இடையே கமல்ஹாசன் தோல்வி மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
x
தினத்தந்தி 2 May 2021 11:14 PM GMT (Updated: 2 May 2021 11:14 PM GMT)

சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் கடுமையான போட்டிக்கு இடையே தோல்வியை தழுவினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடந்தது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவியது.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதற்கு முன்பு அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தது.

சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி 135 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களிலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும், பிரகதிஷில் சமாஜ்வாடி கட்சி 2 இடங்களிலும், ஜனநாயக திராவிட முன்னேற்ற கழகம் 2 இடங்களிலும், தலித் முன்னேற்ற கழகம், குறிஞ்சி வீரர்கள் கட்சி, வஞ்சித் பகுஜன் அகாதி, புதிய விடுதலை கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களிலும் என 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சிகள் களம் கண்டன.

ஒரு தொகுதியில் கூட...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், துணை தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும், பழ.கருப்பையா தியாகராயநகர் தொகுதியிலும், துணை தலைவர் பொன்ராஜ் அண்ணாநகர் தொகுதியிலும், பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்தோஷ் பாபு வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டனர்.

மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்கள் யாருமே நேற்று இரவு 10.30 மணி வரையிலான நிலவரப்படி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

நெருக்கடி கொடுத்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் மட்டும் கோவை தெற்கு தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே குறிப்பிட்ட சில சுற்றுகள் வரை தொடர்ந்து முன்னணியில் இருந்தார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கமல்ஹாசன் வெற்றி வாகை சூடிவிடுவார் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர்.

ஆனால் குறிப்பிட்ட சில சுற்றுகளுக்கு பின்னர் அதே தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல்ஹாசனை முந்தினார். இதையடுத்த சில சுற்றுகளில் கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் ஒருவரையொருவர் பந்தயம் போல முந்திச்சென்றனர். இதனால் கோவை தெற்கு தொகுதியில் யார் வெற்றி பெறுவார்? என்பதில் மதில் மேல் பூனை நிலையே நீடித்து வந்தது.

இறுதியாக 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்று வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி வாகை சூடினார். வானதி சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுத்த கமல்ஹாசன் 51 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசனை விடவும், வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்ட யாருமே பிற வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. 

Next Story