கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராகவே கருத வேண்டும் ஐகோர்ட்டு முழு அமர்வு தீர்ப்பு


கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராகவே கருத வேண்டும் ஐகோர்ட்டு முழு அமர்வு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 May 2021 7:04 PM GMT (Updated: 3 May 2021 7:04 PM GMT)

அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியரை அரசு ஊழியராகத்தான் கருத வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா ராமநாரபுரத்தில் உள்ள மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 2016-ம் ஆண்டு அய்யாத்துரை என்பவர் நகையை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் விவசாய நகைக்கடன் பெற்றார்.

தமிழக அரசு வேளாண் கடன்களை ரத்து செய்தபோது விவசாய நகைக்கடனையும் ரத்து செய்தது. இதையடுத்து நகைகளை திருப்பிக் கேட்க சென்றபோது, கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து அய்யாத்துரை போலீசில் புகார் செய்தார்.

பின்னர் லஞ்சப்பணத்தை சுப்பிரமணியம் பெறும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மறுபரிசீலனை

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் சுப்பிரமணியம் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராக கருத முடியாது என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். அதற்கு ஆதாரமாக, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாக நீதிபதி கருதினார். அவர், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

அரசு ஊழியர்கள்

இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதிகள் எம்.சத்தியநராயணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்தது. பின்னர், ‘தனியார் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக கருத முடியாது என்றுதான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில் ஐகோர்ட்டு குறிப்பிட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர். லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்ரமணியம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு பட்டியலிட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Next Story