சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி: கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை


சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி: கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 3 May 2021 7:16 PM GMT (Updated: 3 May 2021 7:16 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். தயாளு அம்மாளிடமும் ஆசி பெற்றார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தி.மு.க. ஆட்சி அமைக்க இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். தேர்தல் வெற்றி காரணமாக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து, கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றார்.

எப்போதுமே மு.க.ஸ்டாலினுக்கு கோபாலபுரம் இல்லம் குறித்து ஒரு ‘செண்டிமெண்ட்’ உண்டு. கட்சியின் முக்கியமான மாநாடு என்றாலும் சரி, முக்கியமான கூட்டம் என்றாலும் சரி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து, பெற்றோரிடம் ஆசி பெற்ற பின்னரே செல்வது வழக்கம். அந்தவகையில் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனது பெற்றோரிடம் ஆசி பெற கோபாலபுரம் இல்லம் வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்தார்.

உற்சாக வரவேற்பு

கோபாலபுரம் இல்லம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, அங்கே திரண்டிருந்த தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பை ஏற்றபடியே கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்கு வாசலிலேயே காத்திருந்த அவரது சகோதரி செல்வி மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்று, முதுகை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தபடியே இல்லத்துக்கு உள்ளே அழைத்து சென்றார். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் தேங்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டியும் கழிக்கப்பட்டது. அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு மு.க.ஸ்டாலினை ஆரத்தழுவி மகிழ்ச்சி அடைந்தார்.

அதனைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ‘அம்மா... நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறேன் அம்மா...’, என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அவரிடம் பேசினார்.

உணர்ச்சிமயமாக காட்சி

அதனைத்தொடர்ந்து தனது நண்பர்கள், உறவினர்களுடன் தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து சில நிமிடங்கள் மனம் விட்டு பேசினார். எப்போதுமே சுறுசுறுப்பாக கோபாலபுரம் இல்லத்துக்கு வரும் மு.க.ஸ்டாலின் நேற்று மிகவும் உணர்ச்சிமயமாகவே காணப்பட்டார். தேர்தல் பிரசாரங்களில் கூட, ‘தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது. ஆனால் இந்த வெற்றியை காண தலைவர் கலைஞர் (கருணாநிதி) நம்முடன் இல்லையே...’, என வருத்தப்பட்டார்.

அந்தவகையில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக அரியணை ஏற போகும் மு.க.ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி இப்போது இல்லையே என்று எண்ணியதின் விளைவாகவே உணர்ச்சிமயமாகவே காணப்பட்டார். கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் புகைப்படங்களையும் வருத்தம் தோய்ந்த முகமாகவே சில வினாடிகள் பார்த்தார்.

எதிர்வீட்டுக்கு சென்று நலம் விசாரிப்பு

பின்னர் அவர் அண்ணா அறிவாலயம் புறப்பட காரில் ஏறினார். திடீரென மனதில் ஏதோ தோன்றியது போல காரில் இருந்து கீழே இறங்கினார். அதனைத்தொடர்ந்து தனது மனைவியுடன் எதிரே உள்ள வீட்டுக்கு சென்றார். அவருடன் செல்வியும் உடன் சென்றார். அங்கே உள்ளவர்களிடம் சில நிமிடங்கள் நலம் விசாரித்துவிட்டு மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது சிறிது தூரத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த தனது பால்ய கால நண்பர் ராமச்சந்திரனை அழைத்து பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் காரில் அண்ணா அறிவாலயம் நோக்கி புறப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் திடீரென தங்களது வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து சென்றது பக்கத்து வீட்டுக்காரர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.

இதுகுறித்து அந்த வீட்டில் வசிக்கும் மூதாட்டி ராதா பாண்டுரங்கன் என்பவர் கூறியதாவது:-

மூதாட்டி நெகிழ்ச்சி

சிறுவயதில் இந்த பகுதியில் ஓடி ஆடி விளையாடிய மு.க.ஸ்டாலின், இன்றைக்கு முதல்-அமைச்சராக ஆட்சியமைக்க இருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் என்னை சந்தித்து நலம் விசாரித்து போவார். இன்றைக்கு முதல்-அமைச்சராக ஆகவுள்ள அவர், எனது வீட்டுக்கு வருவார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அவர் மிகவும் பிசியாக இருப்பதால், தூரத்தில் இருந்தே அவரை நோக்கி கையசைத்தேன். ஆனால் என்னை பார்த்து திடீரென வந்துவிட்டார். அவரது வருகை என்னை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Next Story