திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா? ஐகோர்ட்டு கேள்வி


திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 May 2021 10:59 PM GMT (Updated: 3 May 2021 10:59 PM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா என்று இரு தரப்புக்கும் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 22-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த கவுன்சில் துணைவிதி 13-ன்படி, தேர்தலில் நிர்வாகி பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்பு, 5 ஆண்டுக்குள் தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு படம் தயாரிக்காத நிரந்தர உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாமே தவிர, நிர்வாகி பதவிகளுக்கு போட்டியிட முடியாது.

ஆனால், இந்த தேர்தலில் ஆர்.ராதாகிருஷ்ணன் கவுரவ செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத்தலைவராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தடை விதிப்பு

இவர்களது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு 5 ஆண்டுகளுக்குள் நேரடியாக தமிழ் திரைப்படங்களை ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் தயாரிக்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், தலா ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதனால், கவுன்சில் விதிகளை மீறி 3 பேரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இந்த 3 பேரும் பதவிகளை வகிக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர்.

மறுதேர்தல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன், ‘இவ்வழக்கு விசாரணை முடியும் வரையில், கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாசும், துணைத்தலைவராக கதிரேசனும் பதவி வகிக்க இடைக்கால தடை விதிக்கிறேன்’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுதேர்தலை நடத்த இரு தரப்பினருக்கும் சம்மதமா என்று கேள்வி எழுப்பி, இரு தரப்பும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவரை, பதவி வகிக்க தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

Next Story