அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்


அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்
x
தினத்தந்தி 3 May 2021 11:02 PM GMT (Updated: 3 May 2021 11:02 PM GMT)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்க இருக்கிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவருடன் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோரும் வந்தனர்.

அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து, தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

கூட்டணி கட்சி தலைவர்கள்

அதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். அவருடன் அந்த கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), எம்.பாபு (செய்யூர்), முகமது ஷாநவாஸ் (நாகை), சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோவில்) ஆகியோரும் வந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல தி.மு.க. இலக்கிய அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, தயாநிதி மாறன் எம்.பி., தொ.மு.ச. பொதுச்செயலாளர் பெ.சண்முகம் எம்.பி., வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதாசேஷையன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சந்தித்து வாழ்த்து கூறினர்.

70 கிலோ எடையில் இட்லி

அதேபோல தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற எ.வ.வேலு (திருவண்ணாமலை), பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்) உள்பட பலரும் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் காண்பித்து வாழ் த்து பெற்றனர். பின்னர் பகல் 12 மணியளவில் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டார்.

அண்ணா அறிவாலய வளாகத்தில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன் ஏற்பாட்டில் 70 கிலோ எடையில் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இட்லி காட்சிக்கு வைக்கப்பட்டது. கருணாநிதி உருவம் பொதித்த அந்த இட்லி தி.மு.க.வினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

சமையல் கலைஞர்களுக்கான நல வாரியம்

இதுகுறித்து இட்லி இனியவன் கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்திருக்கும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கருணாநிதி உருவம் பதித்த இட்லி வடிவமைத்துள்ளோம். தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதியால் சமையல் கலைஞர்களுக்கென தொடங்கப்பட்ட நல வாரியம் பின்னர் முடக்கப்பட்டது. எனவே இந்த நல்ல சூழலில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் முடங்கி கிடக்கும் அந்த வாரியத்துக்கு உயிரூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்றார்.

தி.மு.க. வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். அதேபோல தொண்டர்கள் பலரும் தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடும் வகையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

Next Story