தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பதவி ஏற்பு கவர்னர் மாளிகையில் விழா


தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பதவி ஏற்பு கவர்னர் மாளிகையில் விழா
x
தினத்தந்தி 4 May 2021 12:45 AM GMT (Updated: 3 May 2021 11:12 PM GMT)

சட்டசபை தேர்தலில் வென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். வருகிற 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவர் பதவி ஏற்கிறார்.

சென்னை, 

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.

125 இடங்களில் தி.மு.க. வெற்றி

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரத்து 550 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆதி ராஜாராமை தோற்கடித்தார். ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 794 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். தனக்கான வெற்றி சான்றிதழை வாங்கிய கையுடன் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு கருணாநிதி நினைவிடத்தில் சான்றிதழை வைத்து வணங்கினார்.

வாழ்த்து

தி.மு.க.வின் வெற்றி செய்தி அறிந்ததும் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்திய மந்திரிகள், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் முக்கிய தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயம் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க இருக்கிறது.

இதற்கான முறையான அழைப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4-ந்தேதி (இன்று) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது. அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்

இன்று நடைபெறும் கூட்டத்தில், சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதற்கான கடிதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட இருக்கின்றனர். அதன் பிறகு, அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க இருக்கிறார்.

அவர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், வரும் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையிலேயே பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற இருக்கிறது.

அமைச்சர்களும் பதவியேற்க வாய்ப்பு

தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட சுமார் 160 பேர்கள் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்து வைப்பார்.

அன்றைய விழாவிலேயே தி.மு.க. அமைச்சரவையும் பொறுப்பேற்கும் என்று தெரிகிறது. அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியும் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு 50 சதவீத வாய்ப்பும், மூத்தவர்களுக்கு 50 சதவீத வாய்ப்பும் வழங்கும் வகையில் இந்த அமைச்சரவை பட்டியல் இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

சட்டசபை கூட்டம்

எனவே, அமைச்சர்களும் இந்த விழாவிலேயே பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விரைவில் சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டப்படுகிறது. அதில், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள்.

ஆனால், சட்டசபையின் முதல் கூட்டம் ஜூன் மாதத்திற்கு பிறகே நடக்கும் என தெரிகிறது.

Next Story