சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்: இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 May 2021 2:22 AM GMT (Updated: 4 May 2021 2:22 AM GMT)

இன்று நடைபெறும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சென்னை:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. திமுக தனித்து 125 இடங்களையும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றது. 

இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படும் மு.க.ஸ்டாலின், வரும் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார். 

இந்த கூட்டத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்குகிறார்.

கொரோனா பரவலால், ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார். முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கூட்டணிக் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

Next Story