கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 May 2021 7:26 AM GMT (Updated: 4 May 2021 7:26 AM GMT)

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

இன்று தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரம் தொடர்ந்து 25 நாட்கள் இருக்கும். அதாவது வருகிற 29-ந்தேதியோடு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களிலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story