அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்


அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 May 2021 10:30 AM GMT (Updated: 4 May 2021 10:30 AM GMT)

தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின், நேற்று மாலை தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் போது தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்டம் தோறும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி, மருத்துவமனைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் வசதிகள் கிடைப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story